ரேஷன்கடை தேவை
மதுரை மாவட்டம் செல்லூர் கீழகைலாசபுரம் 23-வது வார்டு பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் ரேஷன்கடை இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் பொருட்கள் வாங்க சிரமப்படுகிறார்கள். பல கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் நேர விரயம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ரேஷன்கடை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
பழுதான மின்மோட்டர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கான மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதுவரையிலும் மோட்டார் பழுது நீக்கப்படவில்லை. பழுதான மின்மோட்டாரால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்ய வேண்டும்.
முருகன், அச்சம்தவித்ர்தான்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்ட நகா்ப்பகுதியில் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டோ ஒட்டுனர்களால் சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தினமும் சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆட்டோ டிைரவர்கள் அவ்வப்போது பொதுமக்களிடம் சாலையிலேயே விவாதத்திலும் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப்பகுதியில் ஆட்டோ ஓட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அண்ணாநகர் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகள் சிரமப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காரைக்குடி.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் வில்லாபுரம், மீனாட்சி நகர் 6-வது மேற்கு தெருவில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனே சாலையில் நடக்கிறார்கள். இரவில் சாலையில் செல்லும் வாகன ஒட்டிகளை துரத்தி சென்று நாய்கள் கடிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திாியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், வில்லாபுரம்.
உடனடி நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாகுப்பிள்ளை புதுத்தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்பட்டது. சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்ய தினத்தந்தி புகார்பெட்டி வழியாக செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மின்வாரியத்துறை அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி.
பாலசந்தர், அருப்புக்கோட்டை.