மருதிப்பட்டி அருகே கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்
மருதிப்பட்டி அருகே கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி பல வகை வலைகளை வீசி மீன்பிடித்தனர்
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மருதிபட்டி ஊராட்சியில் தின்னாரி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கண்மாயில் தண்ணீர் வற்ற தொடங்கியதால் அங்கு மீன்பிடித் திருவிழா நடத்த கிராமத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
மருதிப்பட்டி, அரளிபட்டி, சிங்கமலபட்டி, முறையூர், சூரக்குடி, எஸ்.வி. மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் திரண்டனர். கிராம முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் வெள்ளைக்கொடி வீசியவுடன் கிராம மக்கள் உற்சாகத்துடன் கண்மாய்க்குள் இறங்கி பல வகை வலைகளை வீசி மீன்பிடித்தனர். இதில் கெளுத்தி, கெண்டை,. விரால் மீன்கள் மட்டுமே அதிகளவில் சிக்கின. மீன்களை அள்ளியவர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மீன்கள் கிடைக்காதவர்களுக்கும், மீன்களை பகிர்ந்து கொடுத்தனர். அதன்பின்னர் அந்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று குழம்பு வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.