தற்காலிக பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

தற்காலிக பணியாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-28 19:41 GMT
மதுரை, 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை களிலும் மற்றும் அலுவலகங்களிலும் தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய, தற்காலிக பணியாளர்கள் சுமார் 135 பேரை பணியில் இருந்து வெளியேறுமாறு கடந்த 8-ந் தேதி உத்தர விடப்பட்டது. இதனால், பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய துணைவேந்தரிடம் மனு கொடுத் தனர். ஆனால், அரசு உத்தரவுப்படி மட்டுமே செயல்பட முடியும், நிதி நெருக்கடி உள்ளபோது அரசுக்கு பரிந்துரை செய்ய இயலாது என துணைவேந்தர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பணியில் இருந்து வெளியேற்றப்பட்ட தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணியாளர் துணைவேந்தர் அலுவலக வாயில் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆட்சிமன்றக்குழு, துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தேர்வாணையர் ஆகியோரின் ஒப்புதலின் பேரில் தான் தொகுப்பூதிய மற்றும் தற்காலிக பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டோம். நிரந்தர பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் 10 வருடங்களாக வேலைபார்த்து வந்தோம். திடீரென்று பணியில் இருந்து நீக்கி விட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மாற்றுத்திறனாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவமும் நடந்தது. இருப்பினும், ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் எந்த முடிவும் அறிவிக்கப்படாததால், நேற்று முதல் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்