பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் உழவர் கடன் அட்டை மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் மேலமாத்தூர், சிறு வயலூர், புஜங்கராய நல்லூர், கொளத்தூர் மேற்கு பகுதிகளில் நடைபெற்றது. இம்முகாமில் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை பெறுவதற்கும், எதிர் வரும் பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் பருவ பயிர்களை பயிர் காப்பீடு செய்திடவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம், சிட்டா, ஆதார் அட்டை நகல், விவசாயிகளின் வங்கி கணக்கு விவரம் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் எதிர் வரும் பருவத்தில் சாகுபடி செய்ய உள்ள மக்காச்சோள பயிருக்கும், பருத்தி பயிருக்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பங்குபெற்று இயற்கை இடர்பாடுகளிலிருந்து பயிர் மகசூல் இழப்பினை தவிர்த்திட விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. புஜங்கராயநல்லூர், மேலமாத்தூர் பஞ்சாயத்து கிராமங்களில் நடைபெற்ற முகாமில் ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன் கலந்துகொண்டு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார். மேலும் விவசாயிகளிடம் உழவர் கடன் அட்டை மற்றும் பயிர் காப்பீடு திட்டம் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.