ஏரியூர் அருகே நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலி பறிப்பு-மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை
ஏரியூர் அருகே நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏரியூர்:
ஏரியூர் அடுத்த பெரும்பாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் ஸ்ரீதரன் (வயது 58). இவருடைய மனைவி வாசுகி (54). இவர் நாள்தோறும் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல நேற்று அதிகாலை 6 மணியளவில் பெரும்பாலையில் இருந்து மேச்சேரி சாலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள், வாசுகி அணிந்திருந்த 9 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். தாலி சங்கிலியை பறித்தவர்கள், பென்னாகரம் செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத வாசுகி, கூச்சல் போட்டுள்ளார். வாசுகியின் சத்தம்கேட்டு பொதுமக்கள் வரும் முன்பே, நகை பறிப்பு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து பெரும்பாலை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும்பாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதேபோல் கடந்த வாரம் பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி கிராமத்தில் மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகைகளை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.