கிருஷ்ணகிரியில் வீட்டை காலி செய்ய மறுத்து 7 குடும்பத்தினர் திடீர் சாலைமறியல்-போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரியில் வீட்டை காலி செய்ய மறுத்து 7 குடும்பத்தினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் பின்புறம் சண்முகம் என்ற முருகன் மற்றும் நாகராஜ் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான, 2,500 சதுர அடி இடத்தில், 17 ஆண்டுகளுக்கு முன்பு 7 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதில் குடியிருந்து வரும் நபர்கள் வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த நிலையில். சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகம் மற்றும் நாகராஜ் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும் அந்த பகுதியில் குடியிருப்போர் வீட்டை காலி செய்யவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் சாந்தி என்பவரது வீட்டை காலி செய்யும் உத்தரவுடன் கோர்ட்டு அலுவலர்கள், போலீசார், அதிகாரிகள் ஆகியோர் சாந்தியின் வீட்டை காலி செய்த பின்னர் அந்த வீட்டை சண்முகம் தரப்பினர் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாந்தி மற்றும் 7 வீடுகளில் குடியிருக்கும் நபர்கள் காந்தி சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு உத்தரவை மதிக்க வேண்டும், சட்டப்படி சாலைமறியல் செய்வது தவறு என போலீசார் எச்சரித்தும் அவர்கள் சாலைமறியலை கைவிடாததால், போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நகராட்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.