கூட்டுறவு உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்-நுகர்வோர் குறைதீர் ஆணையம்
கடனை திருப்பி செலுத்தியவருக்கு அசல் ஆவணங்களை தராததால் கூட்டுறவு உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர்:-
கடனை திருப்பி செலுத்தியவருக்கு அசல் ஆவணங்களை தராததால் கூட்டுறவு உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்து கடன் பெற்றார். இந்த கடன் தொகையை அவர் முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்திய பின்னரும், அவருக்கு அசல் ஆவணங்களை திருப்பி வழங்காமல் வீட்டு வசதி வாரிய நிர்வாகம் இழுத்தடித்து வந்தது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சீனிவாசன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், சீனிவாசனின் அசல் ஆவணங்களை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கைது செய்ய உத்தரவு
இதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. இதனையடுத்து இந்த உத்தரவை நிறைவேற்றக்கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சீனிவாசன் மேல் முறையீடு செய்தார். இதுதொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி விசாரணை நடத்தி தீர்ப்பளித்தார். அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி ஆணைய மேலாண்மை இயக்குனர்(சென்னை), தஞ்சை வீட்டுவசதி மண்டல துணைப்பதிவாளர், நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.