தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளை அகற்ற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.என். கண்டிகை செவன் ஹவுஸ் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதராக உள்ளது. அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி பணியாளர்கள் யாரும் குப்பைகளை அகற்ற வருவதில்லை. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-சரண்குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.
பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவார்களா?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் ஒருவர் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் இல்லாத பாலாற்றின் கிளை ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே கழிவுநீரில் விழுந்து விட்டார். அவரின் புத்தகங்கள் அனைத்தும் நனைந்து விட்டன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மாணவனை மீட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலாற்றின் கிைள ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
-ஏஜாத்அகமது, வாணியம்பாடி.
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
ஆரணி நகராட்சி வளாகத்துக்கு வரும் பொதுமக்கள், அலுவலர்களுக்கு குடிநீர் வசதிக்காக பல லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. அது, பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. நகர மன்ற பிரதிநிதிகள் புதிதாக பொறுப்பேற்றும் அதை இதுவரை கண்டுகொள்ளவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராகவேந்திரன், ஆரணி.
பொங்கி வழியும் கழிவுநீர்
வேலூர் சத்துவாச்சாரி அருகே வள்ளலார் நகரில் ஓயாசிஸ் 5-வது தெரு உள்ளது. இங்கு கழிவு நீர்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மூடி வழியாக கழிவுநீரானது பொங்கி வழிகிறது. கால்வாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குணசேகரன், வேலூர்.
வாகன ஓட்டிகள் அவதி
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்.டி.ஓ. ஆபீஸ் செல்லும் சர்வீஸ் சாலை ஓரமாக குவிந்து கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து, தீ வைத்துக் கொளுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலவன், வேலூர்.