இருப்பு வைத்த மக்காச்சோளத்தை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

வெளி மாநில மக்காச்சோள வரத்து விரைவில் தொடங்கும் வாய்ப்பு உள்ள நிலையில் இருப்பு வைத்த மக்காச்சோளத்தை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-04-28 17:32 GMT
போடிப்பட்டி
வெளி மாநில மக்காச்சோள வரத்து விரைவில் தொடங்கும் வாய்ப்பு உள்ள நிலையில் இருப்பு வைத்த மக்காச்சோளத்தை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடர் தீவன உற்பத்தி
நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோழிப்பண்ணைகளும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில் பெருகி வரும் நகரமயமாக்கலால் மேய்ச்சல் நிலங்களும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் அடர் தீவனங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. இதனால் மக்காச்சோள சாகுபடியில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு என்ற அளவில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்காச்சோள சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
வெளி மாநில வரத்து
கடந்த சில ஆண்டுகளாக வெளி மாநிலங்களிலிருந்து மக்காச்சோள வரத்து அதிக அளவில் இருந்ததால் போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. 
இந்தநிலையில் ஒருசில விவசாயிகள் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் மக்காச்சோளத்தை இருப்பு வைத்துள்ளனர். இதுதவிர விவசாயிகளிடமிருந்து மக்காச்சோளத்தை வாங்கிய வியாபாரிகளும் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். தற்போது மக்காச்சோளத்தின் விலை சற்று குறைந்து ஒரு குவிண்டால் ரூ.2400 வரை விற்பனையாகிறது.
இந்தநிலையில் வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோள வரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மேலும் விலை குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருப்பு வைத்துள்ள மக்காச்சோளத்தை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனாலும் பெரிய அளவில் விலை சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே அதிகாரிகளின் கருத்தாக உள்ளது. 
தீவன உற்பத்திக்கான மக்காச்சோள தேவை அதிகரிப்பு, வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு அதிகரிப்பு, வெளி நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங்களால் மக்காச்சோளம் விலை பெரிய அளவில் சரிவதற்கு வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்