அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
நாகர்கோவிலில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சில்மிஷம்
நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் நித்ய லட்சுமணவேல் (வயது 59). இவர் நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
இந்தநிலையில் அதே பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறினர். அதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பணியிடை நீக்கம்
பின்னர் இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செய்தனர். அதன்பேரில் நித்ய லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியர் நித்ய லட்சுமணவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவர் பணி நிறைவு பெற இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.