வீடுகளை குத்தகைக்கு விடுவதாக ரூ.10 கோடி மோசடி செய்தவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண்

வீடுகளை குத்தகைக்கு விடுவதாக கூறி, ரூ.10 கோடி மோசடி செய்தவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.

Update: 2022-04-28 16:55 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி-திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாக, வீடுகளை குத்தகைக்கு விடுவது, பணம் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் காலியாக உள்ள வீட்டின் உரிமையாளர்களிடம் பேசி, வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை பொதுமக்களுக்கு குத்தகைக்கு விட்டு வந்துள்ளனர். இதற்கான குத்தகை பணமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான மணிமங்கலம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி மற்றும் மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்து அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் மாத வாடகைக்கு பேசி, அந்த வீடுகளை தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் வருடாந்திர குத்தகைக்கு, சுமார் 1000-க்கும் மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்ட சுமார் 280-க்கும் மேற்பட்டோர், மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சுமார் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்த நிலையில், அந்நிறுவனத்தின் நிறுவனர் அறிவுநம்பி (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான அறிவுநம்பி நேற்று செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி நவீன் துரைபாபு, 15 நாட்கள் அறிவுநம்பியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து, அவரை போலீசார் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்