மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.20 கோடி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் ஊராட்சி முதல் திருவிடந்தை ஊராட்சி வரை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்கள் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் மற்றும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் வருடந்தோறும் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் பக்தர்களின் அன்னதானத்திற்கு பயன்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இந்த 1000 ஏக்கர் நிலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கு சவுக்கு மரங்கள் வளர்த்தும், நெம்மேல் கடல் நீர் குடிநீர் குடிநீராக்கும் ஆலைக்கு குத்தகை அடிப்படையில் சில ஏக்கர் நிலங்களை வாடகைவிட்டும் பராமரித்து, பாதுகாத்து வருகிறது.
இந்தநிலையில் பட்டிபுலம் மற்றும் நெம்மேலி பகுதியில் உள்ள நிலங்களை சென்னையை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகளை அமைத்துள்ளனர். இதையடுத்து 3 கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்க அறநிலையத்துறைக்கு கோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து நேற்று இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் லட்சுமிகாந்தன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் சென்ற அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து தள்ளி மீட்டனர்.
இதையடுத்து மொத்தம் ரூ.20 கோடி மதிப்புள்ள 17 ஏக்கர் நிலத்தினை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். தனி நபர்கள் யாரும் இந்த இடத்தினை மீண்டும் அபகரிக்காத வகையில் மீட்கப்பட்ட இடத்தில் அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டன. அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும் சம்பவத்தால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.