அ.தி.மு.க. நிர்வாகியின் அண்ணனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் அ.தி.மு.க. நிர்வாகியின்அண்ணனிடம் தனிப்படை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

Update: 2022-04-28 16:47 GMT
கோவை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் அ.தி.மு.க. நிர்வாகியின்அண்ணனிடம் தனிப்படை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

கொலை, கொள்ளை வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்த மான கோடநாடு எஸ்டேட் உள்ளது. 

இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த நபர்கள், பங்களாவுக்குள் இருந்த சில பொருட்களை கொள்ளைய டித்து விட்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக மேல் விசாரணை நடத்த மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகி

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுபோன்று கோவையை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவருடைய மகன் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான சஜீவனிடம் கடந்த 2 நாட்களாக கோவையில் உள்ள பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மையத்தில் உள்ள தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சம்மன்

இதையடுத்து அவருடைய அண்ணன் கூடலூரை சேர்ந்த பா.ஜனதா நகர துணைத்தலைவர் சிபியை விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி நேற்று காலை 11 மணிக்கு அவர் கோவையில் உள்ள பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மையத்துக்கு வந்து தனிப்படை போலீசார் முன்பு ஆஜரானார்.

அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, சிபியின் தம்பியான சஜீவன் கூறிய தகவல் அனைத்தும் உண்மை தானா? அவர் எப்போது வெளிநாடு சென்றார்? எதற்காக சென்றார்? எப்போது திரும்பி வந்தார்? என்பது குறித்து போலீசார் அடுக்கடுக்காக கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

7 மணி நேரம் விசாரணை

மேலும் கோடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததும், கூடலூர் சோதனை சாவடியில் 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை அரசியல் பிரமுகர் ஒருவர் தலையிட்டு விடுவிக்க கூறியதால் அந்த நபர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 எனவே அந்த நபர்களை விடுவிக்கக் கூறிய அரசியல் பிரமுகர் யார்? அவருக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் சிபியிடம் விசாரணை செய்தனர்.

இந்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 7 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் தனது காரில் ஏறி கூடலூர் சென்றார். அ.தி.மு.க. நிர்வாகி சஜீவனின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்