ஒண்டிப்புதூர் பஸ்நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்

கோவை ஒண்டிப்புதூரில் அரசு பள்ளி மாணவர்கள் திடீரென்று மோதிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-04-28 16:41 GMT
கோவை

கோவை ஒண்டிப்புதூரில் அரசு பள்ளி மாணவர்கள் திடீரென்று மோதிக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளிகளில் சம்பவம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் நடத்தை விதிமீறலில் ஈடுபடுவது, ஒழுங்கினமாக நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்திலும் பரவி வருகிறது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதற்கிடையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு வீடியோ வெளியிட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

அரசு பள்ளி மாணவர்கள்

இந்த நிலையில் கோவையில் பள்ளி மாணவர்கள் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் நடந்து உள்ளது. அதாவது கோவை ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது.

இந்த நிலையில் இருபள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அந்த பள்ளிகள் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்கள். அப்போது திடீரென்று மாணவர்கள் இருகுழுக்களாக பிரிந்து திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் கைகலப்பானது. இதனால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

கடும் மோதல்

அப்போது அந்த பஸ்நிறுத்தத்தில் நின்றிருந்த யாரும் அவர்களை தடுக்கவில்லை. அத்துடன் அதை பார்த்த மாணவிகள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் தங்கள் தாக்குதலை விடவில்லை. மேலும் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு மாணவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.

இந்த சம்பவம் குறித்து சிலர் சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக ஒருவருக்கு ஒருவர் மோதல் ஏற்பட்டது தெரியவந்தது.

போலீசார் எச்சரிக்கை

இதையடுத்து போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக எச்சரித்ததுடன், இதுபோன்று பொது இடத்தில் மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள் மோதிக்கொண்டதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடுயோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. 

இதை பார்த்ததும் கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் இது குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா உத்தரவிட்டார்.

அதிகாரிகள் விசாரணை

இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 

அத்துடன் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாணவர்களுக்குள் நடந்த மோதலில் ஈடுபட்டவர்களிடம் இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி உள்ளோம். 

அத்துடன் இது தொடர்பாக அவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்