கோவை அருகே நாடக கதாசிரியர் வெட்டிக்கொலை

கோவை அருகே நாடக கதாசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-28 16:41 GMT
போத்தனூர்

கோவை அருகே நாடக கதாசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கதாசிரியர் மாயம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள அசோக் நிரஞ்சன் நகரை சேர்ந்தவர் செந்தில் சுபாஷ் (வயது 38). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து நாடகம் மற்றும் விளம்பர படங்களுக்கு கதை எழுதி கொடுக்கும் கதாசிரியராக வேலை செய்து வந்தார்.

இவருடைய சகோதரி வீடு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது. அங்கு சென்ற அவர் கடந்த 13-ந் தேதி நண்பரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் கோவை அருகே உள்ள மதுக்கரை அறிவொளி நகரில் காட்டுப்பகுதியில் ஒருவரின் உடல் கிடப்பதாக மதுக்கரை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பிணமாக கிடந்த நபரின் உடலில் 3 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒரு செல்போன் கிடந்தது. 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் கதாசிரியர் செந்தில் சுபாஷ் என்பதும், அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. எனவே அவரை கொலை செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட செந்தில்சுபாஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அவருடைய நண்பர் கேரளாவில் உள்ளார். 

அவரை பார்க்கதான் சென்று உள்ளார். ஆனால் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்