100-க்கும் மேற்பட்ட முத்திரையிடாத தராசுகள் பறிமுதல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டில் தொழிலாளர் துறையினர் நேற்று மேற்கொண்ட திடீர் ஆய்வில், 100-க்கும் மேற்பட்ட முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை,
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டில் தொழிலாளர் துறையினர் நேற்று மேற்கொண்ட திடீர் ஆய்வில், 100-க்கும் மேற்பட்ட முத்திரையிடாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திடீர் ஆய்வு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரின் தலைமையில் நடந்த துறையினருக்கான திறனாய்வு கூட்டத்தில், தராசுகளில் முத்திரையிட தவறியவர்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.
அதேபோல, மதுரையில் உள்ள தொழிலாளர் துறை நடத்திய நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டுகளில் உள்ள தராசுகள் முத்திரையிடப் படாமல் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
எடை அளவு
அதனை தொடர்ந்து, துறையின் முதன்மை செயலர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி, கூடுதல் கமிஷனர் குமரன் வழிகாட்டுதலின் படி, மதுரை மாவட்டத்தில் இந்த மாதம் முழுவதும் தராசுகளில் முத்திரை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டுகளில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மண்டல இணை கமிஷனர் மற்றும் சட்ட எடை அளவு கூடுதல் கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பறிமுதல்
இதற்காக தொழிலாளர் துறையினர் சுமார் 100 பேர் குழு குழுவாக பிரிந்து சென்று ஆய்வு நடத்தினர். அவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொழிலாளர் துறையினரின் ஆய்வை தொடர்ந்து ஆங்காங்கே கடைகளில் இருந்த பலர் கடையைவிட்டு தலைதெறிக்க ஓடத்தொடங்கினர்.
சிலர் தராசு மற்றும் எடைக்கற்களை சாக்குப்பையில் மூடி அங்கேயே வைத்து விட்டு சென்றனர். இந்த ஆய்வில், முத்திரை இல்லாமல் வியாபரத்துக்கு பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முத்திரை
இது குறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நுகர்வோரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்து வணிக நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். எலெக்ட்ரானிக் தராசுகள், எடைப்பாலங்கள், மேடைத்தராசு, வில் தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறையும், எடைக் கற்கள், ஊற்றல் அளவைகள், விட்டத்தராசு, நீட்டல் அளவைகள் ஆகியவற்றை 2 வருடங்களுக்கு ஒரு முறையும் முத்திரையிட வேண்டும்.
சட்டப்படியான எடைஅளவு சட்டத்தின் பிரிவு 24-ன் கீழ் முத்திரையிடாத, எடை குறைவான, போலியான எந்த தராசையும் பயன்படுத்துவது கிரிமினல் குற்றமாகும். முத்திரை யிடாத தராசுகள் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதமும், சிறை தண்டனையும் மற்றும் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
நடவடிக்கை
எனவே, வியாபாரிகள் தங்களது வணிகத்திற்கு பயன்படுத்தும் தராசுகள், எடைக்கற்கள் ஆகியவற்றை உரிய காலத்தில் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் முத்திரையிட்டு கொள்ள வேண்டும். முத்திரை சான்றிதழை பார்வையில் படுமாறு வைக்காவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். புதிய தராசுகள், எடைக்கற்கள் வாங்குபவர்கள் தங்களது பழைய தராசுகள், எடைக்கற்களின் முத்திரை சான்றிதழ் குறித்த விவரங்களை தராசு விற்பனையாளர்களிடம் எழுதி பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால், முத்திரைக்கான நிலுவைத்தொகை அதிகரிக்காமல் இருக்கும். விதிமீறும் தராசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, முத்திரையிடுவதற்கான விண்ணப்பங்களை labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.
முன்பதிவு
ஆன்லைனிலேயே முத்திரையிடுவதற்கான முன்பதிவு செய்து சிரமத்தை தவிர்க்கலாம். இதனை பயன்படுத்தி மதுரை மாவட்டத்தில் உள்ள காய்கறி, இறைச்சி, மீன் மார்க்கெட்டுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முத்திரையிட்ட தராசுகளை பயன்படுத்த வேண்டும். இது குறித்து தொழிலாளர் துறையின் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.