பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம்
பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை,
கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஒப்பந்த நரசு்களுக்கு, பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, நர்சுகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி-யின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆதரவு அளித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து பன்னீர் செல்வம் நிருபர்களிடம் பேசியதாவது:-
கொரோனா பேரிடர் காலத்தில், தற்காலிகமாக பணியாற்றி வந்த ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நீடிப்பு மற்றும் ஏதேனும் தற்காலிக பணி வழங்க வேண்டும். எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்ற நர்சுகள் 315 பேருக்கு, அரசு பணி வழங்க வேண்டும். மகப்பேறு மருத்துவம் படித்த ஆண் நர்சுகள் 134 பேருக்கு, அரசு பணி இடங்களில் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கொரோனா பேரிடர் காலத்தில் பணி அமர்த்தப்பட்ட நர்சுகளில் எம்.ஆர்.பி. தேர்வு எழுதாத ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு சிறப்பு தேர்வின் மூலம் நிரந்தர பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.