மோட்டார் சைக்கிளில் வந்தபோது காட்டெருமை மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிளில் வந்தபோது காட்டெருமை மோதி தொழிலாளி பலியானார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் அன்னராஜ் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி பெரியகுளம் அருகே உள்ள அடுக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். வழியில் அடுக்கம் சோதனைச்சாவடி அருகே வரும்போது அங்கு வந்த ஒரு காட்டெருமை திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அன்னராஜ் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.