‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தீர்வு கிடைத்தது
சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் 10-வது தெருவில் இருக்கும் மின்சார வயர் பூமியில் புதைக்கப்படாமல் சாலையின் மேல் பகுதியில் ஆபத்தாக போடப்பட்டிருப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக மின் வாரிய ஊழியர்களால் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.
கால்வாய் அடைப்பால் சாலைவாசிகள் அவதி
சென்னை பம்மல் அண்ணா நகர் 3-வது மெயின் ரோட்டை சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையிலேயே தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையை கடக்கும் பாதசாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு நடந்து செல்லவேண்டிய நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- விவேக், அண்ணா நகர்.
சமூக சீர்கேடுகள் தடுக்கப்படுவது எப்போது?
சென்னை குயப்பேட்டை, சச்சிதானந்தம் 2-வது தெரு பழைய குடியிருப்பு வாரியம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான சமூக நல திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருக்கின்றது. இதனால் சமூக விரோதிகள் சிலர் தினசரி பகல்-இரவு முழுவதும் சூதாட்டத்தில் ஈடுபடுவதோடு, மது அருந்துவது போன்ற தகாத செயல்களில் ஈடுகின்றனர். இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தபகுதி வழியே நடந்து செல்லவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து இது போன்ற செயல்கள் இனிமேலாவது நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், குயப்பேட்டை.
குடிநீர் குழாயும், நீர்க்கசிவும்
சென்னை பரங்கிமலை மாங்காளியம்மன் கோவில் தெரு, ராணுவ அதிகாரிகள் மையத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்து சாலையில் தேங்கியபடி இருக்கின்றது. நீண்ட நாட்களாக சாலையில் தேங்கும் குடிநீர், கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீச தொடங்குகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் முன்பு சம்பந்தபட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வீணாவதையும் தடுக்க வேண்டும்.
- விஜய், பரங்கிமலை.
வேகத்தடை வேண்டி விண்ணப்பம்
அம்பத்தூர் காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் எதிரே வேகத்தடை இல்லாததால் பள்ளி மாணவிகள் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். மெயின் ரோடு எதிரே பள்ளி இருப்பதால் விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு வேகத்தடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சரவணன், அம்பத்தூர்.
விபத்துகள் தவிர்க்கப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் கோவில்பதாகையும், கலைஞர் நகரும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன. எனவே கோவில்பதாகையும், கலைஞர் நகரும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- ராஜேஷ், ஆவடி.
அபாயகரமான மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஜி.எஸ்.டி சாலையில் அமைந்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரியம் ஆய்வு செய்து சரி செய்யுமா?
- பொதுமக்கள்.
குடிநீரில் பிரச்சினை, தீர்க்கப்படுமா?
சென்னை பாடி தெற்கு மாட வீதி இருக்கும் பகுதியில் சமீபகாலமாக குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதோடு, இந்த நீரை பயன்படுத்தவே முடியாத சூழலும் ஏற்படுகிறது. மேலும் குடிநீர் எடுப்பதற்கு எங்கள் பகுதி மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அலைவது ஏன்? இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?
- ராஜேஸ்வரராவ், பாடி.
வெளிச்சம் தேடும் பொதுமக்கள்
சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் காமராஜர் தெருவில், கடந்த 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் இல்லை. இதனால் எங்கள் பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவில் இந்த தெருவை கடந்து செல்லவே பெண்களும் குழந்தைகளும் அச்சப்படுகிறார்கள். இருள் நிறைந்த எங்கள் தெருவிற்கு வெளிச்சம் கிடைக்குமா?
- ஜோசப், வில்லிவாக்கம்.
தடுக்கி விழுந்தால் ஆபத்து
சென்னை வேளச்சேரி நியூ செக்ரடேரியட் காலனி 2-வது தெரு நுழைவு வாயில் அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சி தருகிறது. இரவில் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் தடுக்கி விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மழைநீர் வடிகால்வாயை மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- தெருமக்கள், வேளச்சேரி.