தூத்துக்குடியில் உப்பு விலை கிடுகிடு உயர்வு
கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடியில் உப்பு விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடி:
கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடியில் உப்பு விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்து உள்ளது.
உப்பு உற்பத்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி, வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, பழையகாயல், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக அமைந்து உள்ளதால் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 1¾ கோடி டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குஜராத்தில் 1¼ கோடி டன் உப்பு, தூத்துக்குடியில் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
மழையால் பாதிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் முதல் வாரம் வரையில் உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்த ஆண்டு வழக்கம் போல் உப்பு உற்பத்தி தொடங்கியது. ஆனால், அவ்வப்போது கோடை மழை பெய்ததால், உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலையும் ‘கிடுகிடு’ என்று உயர்ந்து உள்ளது.
இதுகுறித்து தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தேன்ராஜ் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அவ்வப்போது பெய்து வரும் காலம் தவறிய மழை காரணமாக உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 5 முதல் 7 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, இருப்பு வைக்கப்படும். ஆனால், தற்போது சுமார் 15 ஆயிரம் டன் வரை மட்டுமே இருப்பில் உள்ளது.
விலை உயர்வு
உப்பு கையிருப்பு குறைந்து உள்ளதால் அதன் விலையும் அதிகரித்து வருகிறது. வழக்கமாக 1 டன் உப்பு ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படும். ஆனால், சமீபத்தில் விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்து 1 டன் உப்பு ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகள் மீண்டும் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மழை இல்லாதபட்சத்தில் 20 நாட்களுக்குள் மீண்டும் புதிய உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------