செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் முற்றுகை
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் முற்றுகையிட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி நேற்று மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பால்ராஜ் என்பவர் கண்டக்டராக இருந்தார். திருவள்ளூர் கூட்டு சாலை அருகே மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், தனது உறவினரை ஏற்றிவிட பஸ்சை நிறுத்தியும் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் கண்டக்டர் பால்ராஜை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சக பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தினர்.
பின்னர் கண்டக்டர் பால்ராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் செங்குன்றம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ், முற்றுகையில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பஸ்களை இயக்கினர். இதனால் ஒரு மணி நேரம் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.