ஆராய்ச்சி மாணவிக்கு காதல் தொல்லை; தமிழக வாலிபர் கைது
பெங்களூருவில் ஆராய்ச்சி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
கேரளாவை சேர்ந்த 27 வயது இளம்பெண் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்த இளம்பெண் கல்லூரி படித்த போது தமிழ்நாடு கோயம்புத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் அந்த இளம்பெண் பெங்களூரு வந்ததும் கணேஷ்குமாருடன் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் இளம்பெண்ணை சந்தித்த கணேஷ்குமார் தன்னுடன் மீண்டும் பேசும்படி கேட்டு உள்ளார்.
ஆனால் இதற்கு இளம்பெண் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் கணேஷ் குமார் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதோடு, இளம்பெண்ணை தனது மனைவி என்றும் முகநூலில் எழுதியதாக தெரிகிறது. இதுகுறித்து கணேஷ் குமார் மீது இளம்பெண் கேரளாவில் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் பெங்களூருவுக்கு வந்த கணேஷ் குமார், இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் சதாசிவநகர் போலீசார் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.