வீணாகும் குடிநீர்
ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீ்ர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்மொழி, ஈரோடு.
பணி முடிக்கப்படுமா?
பெருந்துறை அருகே உள்ள பெரியவிளாமலை ஊராட்சி பகுதியில் அத்திக்கடவு திட்டத்துக்காக குழாய் பதிக்க தார் சாலை தோண்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், பெரியவிளாமலை.
எச்சரிக்கை பலகை வேண்டும்
கோபி-சத்தி ரோட்டில் உள்ள ஆசாரிமேடு, வேர்ஹவுஸ் குடோன் பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது தெரியாமல் அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் விபத்தும் ஏற்படுகிறது. எனவே பாலங்கள் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆசாரிமேடு.
மோசமான தார்சாலை
வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எலவநத்தம் முதல் ஞானபுரம் வரை உள்ள தார் சாலை குண்டும்-குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறுகிறார்கள். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்ப்பொதுமக்கள், வடுகபட்டி.
ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுநீர்
பவானி தாலுகாவுக்கு உள்பட்ட காடையம்பட்டி மற்றும் சேர்வராயன்பாளையம் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் தண்ணீர் சாயக்கழிவு நிறத்தில் மாசுபடுகிறது. எனவே பவானி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காடையம்பட்டி.
பாராட்டு
கோபி டவுனில் இருந்து தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி, கொடிகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆகாயத்தாமரைகள், செடி, கொடிகளை அப்புறப்படுத்தியுள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.