ஏற்காட்டில் பூத்துக்குலுங்கும் மலர்கள் கோடைவிழா ஏற்பாடுகள் தீவிரம்
ஏற்காட்டில் மலர் கண்காட்சிக்காக பதியம் போடப்பட்ட மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. மேலும் கோடைவிழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஏற்காடு:-
ஏற்காட்டில் மலர் கண்காட்சிக்காக பதியம் போடப்பட்ட மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. மேலும் கோடைவிழா ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
மலர் கண்காட்சி
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்காட்டில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வு காரணமாக, கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை வெகு சிறப்பான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் கோடைவிழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
25-ந் தேதி தொடங்க வாய்ப்பு
அந்த வகையில், சுமார் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, அஸ்டர், சால்வியா, ஜீனியா, அந்தூரியம், லில்லி, ரோபஸ்ட்ரா, கேளன்டர்ல்லா, பெக்கோணியா, கிரைசெண்டமம், ஸ்விட்வில்லியம், பால்சம் போன்ற மலர்கள் பதியம் போட்டு வளர்க்கப்பட்டன.
இந்த நிலையில் அடுத்த மாதம் (மே) 25-ந் தேதி கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கோடை விழாவை 5 நாட்கள் சிறப்பான முறையில் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். தற்போதே கோடைவிழாக்கு அச்சாரமாக மலர் கண்காட்சிக்காக பதியம் போடப்பட்ட ெசடிகளில் மலர்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன.
இதனால் கோடைவிடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் ஏற்காட்டில் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.