கிராம மக்கள் சாலை மறியல்
திருவோணம் தாலுகாவில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பாப்பாநாட்டில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஒரத்தநாடு;
திருவோணம் தாலுகாவில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பாப்பாநாட்டில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திருவோணம் புதிய தாலுகா
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்தார். இதை நடைமுறைப்படுத்தும் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
சாலை மறியல்
இந்த நிலையில் திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த நெம்மேலி திப்பியக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நெம்மேலி திப்பியக்குடி பகுதி ஒரத்தநாடு தாலுகாவில் இருப்பதுவே வசதியாக இருக்கும் என்றும், மேலும் திருவோணத்தை விட ஒரத்தநாடு தூரம் குறைவாகவும் இருப்பதால், நெம்மேலி திப்பியக்குடி பகுதியை புதிதாக உருவாக்கப்படும் திருவோணம் தாலுகாவில் சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாப்பாநாடு அருகில் உள்ள மதுக்கூர் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பாப்பாநாடு போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களின் கோரிக்கையினை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அவ்வழியே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.