6 பேருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

சாயர்புரம் கூட்டுறவு சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-04-27 19:44 GMT
நெல்லை:
சாயர்புரம் கூட்டுறவு சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மோசடி

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2000 முதல் 2003-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உழவர் கடன் அட்டை திட்ட காசுக்கடனில் பொய்யான நில உடைமை, அடங்கல் போலி வவுச்சர் தயாரித்தும், கடன்தாரர்களை ஏமாற்றி ஆவணத்தில் கையொப்பம் பெற்று கடன் வழங்கியது போன்று மோசடி செய்தும், போலி பத்திரங்களில் போலியாக கையெழுத்து தயார் செய்தும் ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்து 45 கையாடல் செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அப்போதைய துணை பதிவாளர் ஜோசையா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்க நிர்வாகத்தில் இருந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஒரு ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. வழக்கு நடந்து வந்த நிலையில் 3 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடற்கரை செல்வன் அப்போதைய வங்கி செயலாளர் நல்லசிவம், நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமணன், சரக மேற்பார்வையாளர்கள் நாராயணன், ஆறுமுகநயினார், வெங்கடேசன், உறுப்பினர் தேவராஜ் சாமுவேல் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 6 பேருக்கும் மொத்தம் ரூ.37 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜூடித் ஆஞ்சலோ ஆஜரானார்.

மேலும் செய்திகள்