ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
பாளையங்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் 11 மூட்டைகளில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக பாளையங்கோட்டையை சேர்ந்த சாலை குமார் (வயது 48) மற்றும் ஆறுமுகம் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புளியங்குடி சேர்ந்த கங்காதரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நெல்லை வழியாக நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளில் முறைகேடு நடக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தினார்கள்.