தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகம் முதல் இலங்கைச்சேரி வழியாக ஆதிக்குடிக்காடு வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இலங்கைச்சேரி, அரியலூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நக்கசேலம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், நக்கசேலம், பெரம்பலூர்.
பொதுமக்கள் அமர இருக்கை வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வெளிபுறத்தில் பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏதும் இல்லாததால் வாசலிலேயே வெயிலில் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை.
குப்பைகளால் சுகாதர சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஸ்டேட்பேங் முகத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வந்து கலக்கிறது. மேலும் அப்பகுதியில் வீடுகளில் சேகாரமாகும் குப்பைகளை சிலர் வந்து கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் கழிவுநீர் கலப்பது குறித்தும், குப்பைகள் கொட்டுவது குறித்தும் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், திருமயம், புதுக்கோட்டை
குவிந்து கிடக்கும் கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசீய
நெடுஞ்சாலை ஓரத்தில் கட்டிடங்களில் இருந்து வீணாகும் செங்கல் மற்றும் ஏராளமான கற்களை டிராக்டர் மூலம் இரவு நேரங்களில் சிலர் வந்து கொட்டி வருகின்றனர். இதனால் சாலையோரத்தில் கற்கள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம், கரூர்.