இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலம்,
மயிலம் அருகே ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு பயன்படுத்தி வந்த பாதை, தற்போது துண்டிக்கப்பட்டது.
இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர். இருப்பினும் அவர்களது கோரிக்கை இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை.
அப்போது அலுவலகத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடத்தை அவர்கள் அலுவலகத்துக்குள்செல்ல விடாமல் தடுத்தனர். பின்னர், இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், இந்த பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க தெரிவித்து இருப்பதாக, வட்டார வளர்ச்சி அதிகாரி போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.
மேலும், பிரச்சினைக்குரிய பகுதியை பார்வையிட அதிகாரிகள் வருவதாகவும் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.