4 வழிச்சாலை பணிக்காக விதியை மீறி ஏரியில் மண் எடுப்பதாகக் கூறி பொதுமக்கள் திடீர் போராட்டம் விழுப்புரம் அருகே பரபரப்பு
விழுப்புரம் அருகே 4 வழிச்சாலை பணிக்காக விதியை மீறி ஏரியில் மண் எடுப்பதாகக் கூறி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளில் மண் எடுக்கப்பட்டு சாலை பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படுகிறது.இதேபோல் விழுப்புரம் அருகே ராமையன்பாளையம் ஏரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு, பகலாக மண் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் ராமையன்பாளையம் ஏரியில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாகக்கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் நேற்று பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதி மீறல்
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் அரசு விதித்த உத்தரவை மீறி ஏரியில் இருந்து மண் எடுக்கப்படுகிறது.
இதுசம்பந்தமாக ஏற்கனவே நாங்கள் போராட்டம் நடத்தியபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது மீண்டும் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்படுகிறது, மேலும் 4 வழிச்சாலைக்காக மண் எடுப்பதாகக்கூறி வெளியில் ஒரு லோடு ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுபற்றி மாவட்ட கலெக்டரிடம் முறைப்படி புகார் மனு அளிக்குமாறும், தற்போது போராட்டத்தை கைவிடுமாறும் அறிவுறுத்தினர். அதனை ஏற்ற பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.