பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படுமா?- மந்திரிசபையில் விவாதிக்க வாய்ப்பு
மாநில அரசு வசூலிக்கும் வாட் வரி குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில மந்திரி கூறியுள்ளார்.
மும்பை,
மாநில அரசு வசூலிக்கும் வாட் வரி குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில மந்திரி கூறியுள்ளார்.
பிரதமர் குற்றச்சாட்டு
கொரோனா அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்தபோதும், மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை என தெரிவித்தார். இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்து அறிக்கை வெளியிட்டார்.
மந்திரி சபையில் இன்று முடிவு
இதற்கிடையே இன்று நடைபெற இருந்த மராட்டிய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடியுடனான கூட்டம் காரணமாக நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைப்பட்டுள்ளது. எனவே இன்றைய கூட்டத்தில் வாட் வரி குறித்து விவாதிக்கப்படும் என மூத்த மந்திரி ஒருவர் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மாநில அரசின் மதிப்பு கூட்டு வரியால் தான் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது என்பது உண்மையில்லை. பெட்ரோலை பொறுத்தவரை மராட்டிய அரசின் மதிப்பு கூட்டுவரியின் பங்கு மத்திய அரசின் வரியை விட 97 பைசா அதிகம் என்று முதல்-மந்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசின் வரி பங்கை சமநிலைப்படுத்தும் வகையில் எரிபொருள் மீதான வாட் வரி லிட்டருக்கு 97 பைசா குறைக்கப்படலாம். எவ்வாறாயினும், இத்தகைய முடிவுகள் குறித்து இன்று நடக்கும் மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முதல்-மந்திரியிடம் இருந்து இறுதி ஒப்புதல் பெறப்பட வேண்டும். எனவே மந்திரிசபை கூட்டத்தில் எரிபொருள் விலை குறித்து விவாதிக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி சுமை
இதேபோல நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மராட்டிய அரசின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் கோடி. இதில் ரூ.1½ லட்சம் கோடி மாநில ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்படுகிறது. இது மாநில நிதியில் சுமையை ஏற்படுத்துகிறது” என்றார்.