வாலிபரை ஓட, ஓட விரட்டி கத்தியால் வெட்டியவர் கைது
திருக்கோவிலூர் அருகே வாலிபரை ஓட, ஓட விரட்டி கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே வடமருதூர் பள்ளக்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கூத்தான் மகன் குருராஜன் (வயது 29). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் கணேசனுடன் அதே ஊரில் உள்ள ராமலிங்கம் என்பவருடைய வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் தனுஷ் (27) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குருராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அதிர்ச்சி அடைந்த குருராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் தனுஷ் தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் சேர்ந்து ஓட ஓட விரட்டி குருராஜனை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குருராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.