பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 150 பேர் கைது

நாகர்கோவிலில் மாற்று இடம் வழங்கி விட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-27 15:59 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாற்று இடம் வழங்கி விட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு
குமரி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழையாற்று கால்வாய், பறக்கின்கால் கால்வாய் மற்றும் பல்வேறு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொதுப்பணித்துறை சார்பில் இடித்து அகற்றப்பட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் நுள்ளி குளத்தின் கரையில் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதற்கிடையே மாற்று இடம் வழங்கி விட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
150 பேர் கைது
இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் கட்சியினர் மற்றும் வீடுகளை இழந்த பொதுமக்கள் ஏராளமானோர் அண்ணா பஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக வந்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட தயாராக இருந்தனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். எனினும் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்களை எழுப்பியபடி அண்ணா பஸ் நிலையம் முன் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்தனர். அந்த வகையில் 130 பெண்கள் உள்பட மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் செட்டிகுளத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
உண்ணாவிரதம்
ஆனால் மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தங்களின் கோாிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் வரவில்லை என கூறி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது ஒரு பெண் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்