புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்
பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர்
பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
6 கடைகளுக்கு சீல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான இடங்கள், குடோன்களில் ஆய்வு செய்தனர். திருப்பூர், பல்லடம், அவினாசி, உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில் பகுதிகளில் 156 பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
காவல்துறை உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 6 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வீட்டில் பதுக்கி வைப்பு
திருப்பூர் வெள்ளியங்காடு குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 5¼ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களுக்கு வீடு, கடை வாடகைக்கு விடக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து 94440 42322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.