அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-26 21:26 GMT
பாடாலூர்:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் பாடாலூர் அருகே உள்ள நக்கசேலம் பகுதியில் நேற்று முன்தினம் வந்த அரசு பஸ்சில் இருந்து பள்ளி மாணவி விஜயலட்சுமி தவறி விழுந்ததில் அவருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மாவிலிங்கை, புது அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தூர் கேட்டில் இருந்து துறையூர் சென்ற அரசு பஸ் மாவிலிங்கையிலும், பாடாலூரில் இருந்து துறையூர் சென்ற அரசு பஸ் புதுஅம்மாபாளையத்திலும் சிறைபிடிக்கப்பட்டது.
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
மறியலில் ஈடுபட்டவர்கள், அரசு பஸ்சை குறிப்பிட்ட நேரத்திற்கு முறையாக இயக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். குறிப்பிட்ட அளவிலான பயணிகளை மட்டுமே பஸ்சில் ஏற்ற வேண்டும். பயணிகளிடம் டிரைவர், கண்டக்டர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சிறைபிடிக்கப்பட்ட பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பெரம்பலூர் கிளை மேலாளர் ராஜா மாவிலிங்கைக்கும், துறையூர் கிளை மேலாளர் தண்டபாணி புதுஅம்மாபாளையத்திற்கும் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிப்பதாக அவர்கள் கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்