காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பாய்லர் ஆலை ஊழியர்

காரில் மர்மமான முறையில் பாய்லர் ஆலை ஊழியர் இறந்து கிடந்தார்.

Update: 2022-04-26 21:19 GMT
கீழப்பழுவூர்:

பாய்லர் ஆலை ஊழியர்
திருச்சி கைலாசபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 35). இவர் பாய்லர் ஆலை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் சின்ன மணக்குடி கிராமத்தில் தங்கியிருந்து, அவரது தாய் நல்லம்மாளை பார்த்துவிட்டு, இரவில் மீண்டும் திருச்சிக்கு அவரது காரில் சிதம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கீழப்பழுவூர் அருகே மேலப்பழுவூர் பூண்டி பிரிவு பாதை அருகே கார் ஒன்று என்ஜின் ஓடிய நிலையிலேயே நின்றிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரின் கதவைத் திறந்து பார்த்துள்ளனர்.
மர்ம சாவு
அப்போது டிரைவர் இருக்கையில் சாய்ந்தபடி வாய் மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வந்தநிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் வேல்முருகன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேல்முருகனின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்