அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்ததாக பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி:-
சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மைத்துனர் பழனியப்பனுக்கு அரசு வேலை கிடைக்க முயற்சி செய்து வந்துள்ளார். இது குறித்து அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவீந்திரன் என்பவரிடம் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அரசு போக்குவரத்து துறையில் பழனியப்பனுக்கு டிரைவர் வேலை வாங்கி தருவதற்கு ரூ.3½ லட்சம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜா, ரூ.1½ லட்சத்தை ரவீந்திரனிடம் கொடுத்துள்ளார். வேலை கிடைத்தபின் மேலும் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 4 வருடங்களுக்கு மேல் ஆகியும் வேலை வாங்கி தராததால் ராஜா கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியில் வீட்டை காலி செய்து விட்டு ரவீந்திரன் தப்பி சென்று விட்டார். இதனால் ராஜா பல இடங்களில் ரவீந்திரனை தேடிவந்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியில் ரவீந்திரன் வசிப்பதை அறிந்து அங்கு சென்று தான் கொடுத்த ரூ.1½ லட்சத்தை திரும்பி கேட்டுள்ளார். அதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட ரவீந்திரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.