ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சிங்கம்பேட்டை அருகே உள்ள மொண்டியபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி என்கிற மணி. விவசாயி. இவரது வீடு அருகே உள்ள பண்ணையில் 10 சிந்து இன பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த ஒரு பசுமாடு நேற்று முன்தினம் இரவு 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதில் ஒன்று ஆண் கன்று, மற்றொன்று பெண் கன்று ஆகும்.
இதுகுறித்து முத்துசாமி கூறும்போது, ‘நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பசு மாடுகள் வளர்த்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பசு மாடும் 2 கன்றுக்குட்டிகளை ஈன்றதில்லை. தற்போது தான் ஒரு பசு மாடு 2 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது’ என்றார். இதனை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.