விசைப்படகுகளை கரையேற்றி பராமரிப்பு பணி தீவிரம்
விசைப்படகுகளை கரையேற்றி பராமரிப்பு பணி தீவிரம்
ராமேசுவரம்
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும் மீன்கள் இனப்பெருக்க கால சீசன் ஆகும். இந்த சீசனில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டின் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கியது. ராமேசுவரம் பகுதியில் மட்டும் சுமார் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் 11-வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தடை காலங்களில் விசைப்படகுகளை கரையில் ஏற்றிவைத்து பராமரிப்பு பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் படகுகளுக்கான மரக்கட்டைகள் மற்றும் பழுதுபார்ப்பு உபகரண பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் படகுகளில் வேலை பார்ப்பவர்களின் கூலியும் உயர்ந்துள்ளதால் ராமேசுவரம் பகுதியில் இந்த ஆண்டு பெரும்பாலான படகுகள் பராமரிப்புக்காக இன்னும் கரையேற்றப்படாமல், துறைமுக கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பாம்பன் தெற்குவாடி பகுதியில் ஏராளமான விசைப்படகுகள் கரையில் ஏற்றி வைக்கப்பட்டு மராமத்து பணிகள் தீவிரமாகவே நடந்து வருகின்றது. தொண்டி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.