அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிய நிலத்தை வழங்கிட வலியுறுத்தியும், கொம்பாடிப்பட்டியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு மாநில செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
அதன்பின்னர் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.