தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

தொடர் கோடை மழையால் திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-26 19:41 GMT
ஆர்.எஸ்.மங்கலம்
தொடர் கோடை மழையால் திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக சாயல்குடி அருகே வாலிநோக்கம், ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி சம்பை, பத்தநேந்தல், உப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். அதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பல ஊர்களிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பள பாத்திகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை கால சீசன் தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் உப்பு உற்பத்தி தொடங்கியது. உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரி மடம் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாகவே கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெயர்த்து எடுப்பு
குறிப்பாக திருப்பாலைக்குடி, சம்பை, பத்தநேந்தல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள உப்பள பாத்திகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முழுவதிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கல் உப்போடு மழைநீரும் கலந்ததால் பாத்திகளில் இருந்து கல் உப்புகளை பிரித்து எடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் மழை நீருடன் கலந்து காட்சி அளித்ததால் உப்புகளை பெயர்த்து அங்கு உள்ள சாலை ஓரத்தில் மலை போல் குவித்துக் கொட்டப்பட்டுள்ளது.
மழை நீருடன் கலந்திருந்த கல்உப்புகள் பெயர்த்து எடுக்கப்பட்டு மீண்டும் பாத்திகளில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு கல் உப்பு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பாதிப்பு
இதுபற்றி திருப்பாலைக்குடியைச் சேர்ந்த உப்பள வியாபாரி கூறும்போது, இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாத்திகளில் கல்உப்புக்காக தேக்கப்பட்டிருந்த நீரில் மழைநீரும் கலந்ததால் கல் உப்பை பிரித்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பாத்திகளில் இருந்து மழை நீருடன் சேர்ந்து இருந்த கல்உப்புகள் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளன. மீண்டும் பாத்திகளில் தண்ணீர் பாய்ச்சி கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகின்றது. இந்த ஆண்டு உப்புக்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில் கோடை மழையால் கல் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்