இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது
கிருஷ்ணராயபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம்,
வாக்குவாதம்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்தவர்கள் நடராஜன் (வயது 60), பிரகாஷ் (25), திருவள்ளூர் (56), மற்றொரு பிரகாஷ் (25) ஆகிய 4 பேரும் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சபரிநாதன் (21), கார்த்திக் (20), மனோ என்கிற அய்யப்பன் (38), மற்றொரு கார்த்திக் (20) ஆகியோர் தெருவிளக்கை அணைத்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும், அந்த வழியாக சென்ற காரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்த மோதலில் நடராஜன், பிரகாஷ், திருவள்ளூர், மற்றொரு பிரகாஷ் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாதன், கார்த்திக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.