தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் புளியஞ்சோலை
திருச்சி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில், மலையும், மலை சார்ந்த பகுதிகளும், நீரோட்டத்துடன் அடர்ந்த வனப்பகுதியுடன் காணப்படும் புளியஞ்சோலைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் பெண்கள் குளித்த பின் தேவைப்படும் உடை மாற்றும் அறைகள், நீர்மின் திட்டத்தினால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. புளியஞ்சோலையிலுள்ள கழிவறை வளாகங்கள் தண்ணீர் வசதியின்றி பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகின்றன. குடிநீருக்கான குழாய்கள் உடைந்த நிலையில் மாதக்கணக்கில் குடிநீர் வசதியின்றி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புளியஞ்சோலை, திருச்சி.
ஆபத்தான கம்பிகள்
திருச்சி மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் பள்ளி முன்பு உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாயின் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் வகையில் உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மிளகுப்பாறை, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சமலை திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் அமைந்துள்ளஒரே கிழக்கு தொடர்ச்சி மலையாகும். இதில் ஏராளமான மலைக்கிராமங்கள் இருக்கின்றன. பச்சமலை செல்வதற்கான மலைப்பாதை துறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் உப்பிலியபுரத்திலிருந்து பிரிகிறது. மலையேறும் பாதையானது தமிழக அரசு வனத்துறையினரால் சோபனபுரம் என்ற கிராமத்தில் இருந்து ஆரம்பித்து வனத்துறை சோதனை சாவடி டாப் செங்காட்டுப்பட்டி, பூதக்கால் சாலை பிரிவு வரை 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு தற்போது மலைவாழ்மக்களின் அன்றாட போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. கனமழை காரணமாக வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த சாலை கடுமையான சேதம் அடைந்து போக்குவரத்திற்கு கடும் சவால் அளிக்கும் வகையில் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பச்சமலை, திருச்சி.