2 வாரங்களில் முட்டை விலை 90 காசுகள் சரிவு: பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ.7 கோடி இழப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 2 வாரங்களில் 90 காசுகள் குறைந்து இருப்பதால், தினமும் பண்ணையாளர்களுக்கு ரூ.7 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Update: 2022-04-26 18:51 GMT
நாமக்கல்:
முட்டை விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களில் முட்டை விலை 90 காசுகள் வரை குறைந்து உள்ளது. தற்போது முட்டையின் உற்பத்தி செலவு 450 காசுகளாக உள்ள நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டையின் கொள்முதல் விலையை 360 காசுகளாக நிர்ணயம் செய்து இருப்பதால் பண்ணையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
ரூ.7 கோடி இழப்பு
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4½ கோடி முட்டைகளுக்கு மேல் உற்பத்தியாகிறது. ஐதராபாத் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 290 காசுகளாக குறைந்து இருப்பதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை குறைந்து வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் முட்டை உற்பத்தி குறையும். ஆனால் விற்பனை குறையாது. ஆனால் இந்த ஆண்டு முட்டை விலை ஏன் குறைகிறது என்பது தெரியவில்லை.
முட்டையின் உற்பத்தி செலவு 450 காசுகளாக உள்ள நிலையில், 130 காசுகள் வரை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. வியாபாரிகள் ஒரு முட்டையை 320 காசுகளுக்கு மட்டுமே வாங்கி செல்கிறார்கள். இதனால் தினமும் பண்ணையாளர்களுக்கு ரூ.7 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. முட்டையின் கொள்முதல் விலை குறைந்து வந்தாலும், சில்லரை விற்பனையில் விலை குறைக்கப்படுவது இல்லை. இதை ஒழுங்குப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்