கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரில் பயணம் செய்வோர் சீட்பெல்ட் அணிவதை கண்காணிக்க வேண்டும் போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிவதை கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்

Update: 2022-04-26 17:22 GMT

கள்ளக்குறிச்சி

ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகள் குறித்தும், விபத்துகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீசாருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோலார் தடுப்பு உருளைகளால் விபத்துகள் பெரிதும் குறைந்துள்ளது. ‘சீட் பெல்ட்’ அணிவதனால் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயமாக ‘சீட் பெல்ட்’ அணிவதை போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ‘சீட் பெல்ட்’ அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, அலுவலக மேலாளர்(குற்றவியல்) சிவசங்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்