ஒரு மாணவனுக்காக செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி மூடப்படும் அபாய நிலை
உடுமலையில் ஒரு மாணவனுக்காக செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி மூடப்படும் அபாய நிலையில் உள்ளது.
போடிப்பட்டி
உடுமலையில் ஒரு மாணவனுக்காக செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி மூடப்படும் அபாய நிலையில் உள்ளது.
பொருளாதார நெருக்கடி
ஆசிரியரின் அதட்டல் குரல் இல்லை... சக மாணவர்களின் ஆரவாரம் இல்லை...தோளோடு தோள் சேர்க்க தோழமை இல்லை... ஆனாலும் ஒற்றை மாணவனோடு பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பள்ளியில் ஆசிரியையும், மாணவனும் இருப்பது அங்கே அம்மாவும், மகனும் வீட்டில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருப்பது போன்ற சூழல் நிலவுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வெங்கடகிருஷ்ணா சாலையில் ஒரே ஒரு மாணவனோடு பழனிப்பாதை நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்த பள்ளியில் மட்டும் பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இல்லை என்பது வேதனை தரும் விஷயமாக உள்ளது.
மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:-
‘அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பெற்றோர்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் பள்ளிகளில் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது பல அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனாலும் மாணவர்கள் எண்ணிக்கையில் எதிர்பார்த்த அளவில் ஏற்றம் இல்லை.
உடுமலையில் உள்ள இந்த நகராட்சி தொடக்கப்பள்ளியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். பஸ் நிலையம் அருகிலுள்ள வி.பி.புரம் குடியிருப்புப் பகுதியிலுள்ள 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பள்ளியே கைகொடுத்து வந்தது. ஆனால் பஸ் நிலையம் விரிவாக்கத்துக்காக வி.பி.புரத்திலுள்ள வீடுகள் மாரியம்மாள் நகருக்கு மாற்றப்பட்ட போது ஒட்டுமொத்தமாக பள்ளியின் மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
இதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டது. அத்துடன் பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி தள்ளு வண்டிகள் ஆக்கிரமிப்பால் பள்ளியே வெளியே தெரியாத நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோருக்கு தயக்கம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பெரும்பாலும் வணிக நிறுவனங்களே உள்ளன. இருக்கும் கொஞ்ச நஞ்சம் வீடுகளிலும் பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரே குடியிருக்கின்றனர். இவர்களுடைய குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படிப்பதையே விரும்புகின்றனர்.
மூடும் நிலை
தற்போது இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ள நிலையில் முகம்மது ஆதில் என்ற ஒரு மாணவர் மட்டுமே 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டோடு அவர் பள்ளியை விட்டு வெளியேறும் நிலையில் அடுத்த ஆண்டு பள்ளியில் மாணவர்களே இல்லாத நிலை ஏற்படும். இதனால் பள்ளியை மூடும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி மூடப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று கல்வியாளர்கள் கூறினர்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மனோகரன் கூறியதாவது:- ‘பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகள் மற்றும் மாணவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது'. இவ்வாறு அவர் கூறினார்.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிதாக தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர் இல்லாமல் அரசுப்பள்ளி மூடப்படும் அவலம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.