தமிழக நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது

பெங்களூரு அருகே, தமிழக நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடி கொள்ளையடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

Update: 2022-04-26 16:38 GMT
பெங்களூரு: பெங்களூரு அருகே, தமிழக நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ.1 கோடி கொள்ளையடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ரூ.1 கோடி கொள்ளை

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜோசப். தொழில் அதிபரான இவர் பல்வேறு மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். அதுபோல கர்நாடக மாநிலம் உப்பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளிலும் அவர் நிதி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன கணக்காளர் பிராங்கிளின், நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 4 பேர் உப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனங்களில் வசூலான ரூ.1 கோடியை வாங்கி கொண்டு கடந்த மாதம் (மார்ச்) 11-ந் தேதி நாகர்கோவில் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளியில் உள்ள நைஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது இன்னொரு காரில் வந்த மர்மநபர்கள், நிதி நிறுவன ஊழியா்கள் சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் நிதி நிறுவன ஊழியர்கள் சென்ற காரின் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள், நிதி நிறுவன ஊழியர்களையும் தாக்கினர். பின்னர் காரில் இருந்த ரூ.1 கோடி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் வந்த காரை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின்பேரில் மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மர்மநபர்கள் வந்த காரின் பதிவெண்ணையும், தாங்கள் வந்த காரின் பதிவெண்ணையும் நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்து இருந்தனர். இதையடுத்து ஓசூர் சாலையில் நிதி நிறுவன ஊழியர்கள் வந்த காரை போலீசார் கண்டுபிடித்தனர். நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த தகவலை வைத்து மர்மநபர்கள் வந்த காரை பற்றி போலீசார் விசாரித்தனர்.
அப்போது அந்த கார் சாம்ராஜ்நகர் மாவட்டத்தை கடந்து தமிழ்நாட்டிற்குள் சென்றது தெரியவந்தது. 

ஆனால் அதன்பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சோதனை சாவடிகளை அந்த கார் எங்கும் கடக்காதது தெரியவந்தது. இதையடுத்து ஈரோட்டில் இருந்து எர்ணாகுளம் வரை உள்ள 250 கிலோ மீட்டர் வரை பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போதும் அந்த கார் எங்கும் சிக்கவில்லை. அப்போது தான் மர்மநபர்கள் காரின் பதிவெண்ணை மாற்றியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ‘பாஸ்டேக்’ மூலம் துப்பறிய போலீசார் முடிவு செய்தனர்.

10 பேர் கைது

அதன்படி சுங்கச்சாவடிகளில் உள்ள ‘பாஸ்டேக்’ பதிவேடுகளை எடுத்து பார்த்த போது ஒரு கார் தமிழக, கர்நாடக பதிவெண்களை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளை கடந்து சென்றது தெரியவந்தது. அதன்பேரில் கேரளாவில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 10 பேரை மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர்கள் ராஜீவ், விஷ்ணுலால், சனல், அகில், ஜாசின் பரீஸ், சனப், சமீர், சைனுல்லா ஹபீதி, ஷபீக், ரம்ஷித் என்கிற முதாப் என்பதும், இவர்கள் 10 பேரும் பிரபல கொள்ளையன் ஸ்ரீதரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.9.70 லட்சம் ரொக்கம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் ரூ.90.30 லட்சம் ஸ்ரீதரிடம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்