மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மேம்பாட்டு பணிக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணி

சாலை மேம்பாட்டு பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

Update: 2022-04-26 16:27 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் மேம்பாட்டு பணிகளுக்காக ஆண்டுதோறும் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டு வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகளை ஒருவாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இப்பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. 

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர் வசந்த்பிரியா ஆகியோரின் மேற்பார்வையில் வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இப்பணிகளுக்காக விழுப்புரம் நகரில் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாலை ஆய்வாளரின் கீழ் 5 பேர் கொண்ட சாலை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இக்குழுவினர் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் வீரன் கோவில் அருகிலும், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகிலும், விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் மேற்கு போலீஸ் நிலையம் அருகிலும், 

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் 2 இடங்களிலும், விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் மாம்பழப்பட்டு சாலை அருகிலும் தனித்தனி குழுக்களாக பிரிந்து தினந்தோறும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.


விக்கிரவாண்டி

இதேபோல், விக்கிரவாண்டி பழைய நெடுஞ்சாலை, ரெட்டிக்குப்பம் கயத்தூர் சாலையில்  உதவி பொறியாளர் அனிதா, சாலை ஆய்வாளர் அருள் மொழி, பணியாளர்கள் செல்வ சந்திரன், சரவணக்குமார், மதியழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு வார காலம்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வாகன போக்குவரத்தின் வளர்ச்சி, அதன் தாக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து சாலைகளின் வசதிகளை தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு இந்த கணக்கெடுப்பு பணியானது ஒரு வார காலம் தொடர்ந்து 24 மணி நேரமும் மேற்கொள்ளப்பட உள்ளது. 

மாநில நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அடர்த்தியை மதிப்பிடுவதே இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையில் தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்துவது, 

தரம் உயர்த்துவது, அகலப்படுத்துவது, சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து அரசு முடிவு எடுக்கும். எனவே வாகன போக்குவரத்து கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்