மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் நகை அடகு கடை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-04-26 16:25 GMT
திருப்பூர், ஏப்.27-
திருப்பூரில் நகை அடகு கடை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அடகு கடை கொள்ளை
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என்.காலனி பகுதியில் ஜெயக்குமார் என்பவரின் நகை அடகு கடையில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி வடமாநில கும்பல் பூட்டை உடைத்து உள்ளே சென்று 3¼ கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.15 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியது. இ்தில் தொடர்புடையவர்களை ஓடும் ரெயிலில் திருப்பூர் தனிப்படையினர் மடக்கிப்பிடித்தனர். பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தை சேர்ந்த மகதப் ஆலம் (37), முகமது பத்ரூல் (25), முகம்மது சுபான் (30), தில்காஷ் (29) ஆகியோரை கொள்ளை சம்பவம் நடந்த 38 மணி நேரத்துக்குள் கைது செய்து கொள்ளைபோன அனைத்து சொத்துக்களையும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். மேற்கண்ட 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் 
இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் இர்டா பகுதியை சேர்ந்த முர்தஜா (37) என்பவர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். கொள்ளை குற்ற செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட முர்தஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள முர்தஜாவிடம் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை திருப்பூர் மாநகரில் 31 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்