வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம்

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Update: 2022-04-26 16:22 GMT
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பெரிய கம்பெனிகளுக்கு செல்லும் வாகனங்கள், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக தான் சென்று வருகின்றன. 

தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மிக பிரமாண்டமான பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பம் முதலே பாலம் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், பாலத்தில் தற்போது வரை 5 முறை விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே நடந்து வருகிறது. எனவே பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. கனிமொழி எம்.பி. பாலத்ைத உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கு 2 முறை கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மார்ச் 30-ந்தேதி பாலம் மீண்டும் சேதம் அடைந்ததை தொடர்ந்து அதை சரிசெய்வதற்காக டெண்டர் வெளியிடப்பட்டது. அதில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்ய ரூ.21 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 180 நாட்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதுவரை பாலப்பணிகள் தொடங்கப்படாத நிலையில் நேற்று முன்தினம் பாலத்தில் சேதமடைந்த பகுதிக்கு அருகிலேயே மீண்டும் ேசதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. 
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சரக்குகளை வாகனங்களில் ஏற்றி செல்பவர்களும் ஒருவிதமான அச்சத்துடன் சென்று வருகின்றனர். சேதம் அடைந்த பகுதியில் மெதுவாக செல்கிறார்கள். இதற்கிடையே சேதமடைந்த பகுதியில் சிமெண்டு பூசி சீரமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது.  அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு வல்லநாடு பாலத்தை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்